பொதுத்தேர்தலின்போது கூட்டாகவும், உள்ளாட்சிசபைத் தேர்தலின்போது தனிவழி செல்வதற்கும் சிலிண்டர் கூட்டணிக்கு ஆதரவளிக்கும் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இதன்படி பொதுத்தேர்தலில் கேஸ் சிலிண்டர் சின்னத்தின்கீழ் போட்டியிடவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபாலடி சில்வா அணி, உள்ளாட்சிசபைத் தேர்தலில் கை சின்னத்தில் களமிறங்கவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுத்தேர்தலில் கேஸ் சிலிண்டர் சின்னத்திலும், உள்ளாட்சிசபைத் தேர்தலில் யானை சின்னத்திலும் போட்டியிட தீர்மானித்துள்ளது.இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுத்தேர்தலில் கூட்டணி அமைத்தும், உள்ளாட்சிசபைத் தேர்தலில் சேவல் சின்னத்திலும் களமிறங்கவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த சில தரப்புகள் பொதுத்தேர்தலில் தனிவழி செல்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈபிடிபி, தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தனித்து களமிறங்கவுள்ளன என்று தெரியவருகின்றது.
