“என்னை கைது செய்வதற்குரிய இயலுமை பற்றி அரசாங்க உயர்மட்டத்தில் ஆராயப்பட்டுவருகின்றது. எப்படிதான் என்னை அச்சுறுத்த முற்பட்டாலும் எதிர்வரும் திங்கட்கிழமை (21) இரு அறிக்கைகளையும் நிச்சயம் வெளிப்படுத்துவேன்.”
இவ்வாறு பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை வெளியிடப்படாத இரு ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை ஏழு நாட்களுக்குள் வெளியிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அவற்றை நான் வெளியிடுவேன் என திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் அறிவித்திருந்தேன்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத், என்னிடம் உள்ள அறிக்கைகளை ஒப்படைப்பதற்கு மூன்று நாட்கள் அவகாசம் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன், எனக்கு அறிக்கைகள் கிடைக்கப்பெற்ற விதம் பற்றியும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் நிலவைக் காட்டுகின்றேன், எனவே, நிலவை பாருங்கள், மாறாக என் விரல்களை உற்றுநோக்க வேண்டாம் என அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கின்றேன். என்னை பற்றி விசாரிப்பதற்கு முன்னர் அறிக்கைகளை வெளியிடுவதற்கு அரசாங்கம் ஏன் தயங்குகின்றது என்பதை அமைச்சர் விஜித ஹேரத் வெளிப்படுத்த வேண்டும்.
தமது கைகளுக்கு அறிக்கை கிடைத்த கையோடு அவற்றை பகிரங்கப்படுத்துவோம் என்ற உத்தரவாதத்தை ஜனாதிபதி மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் உரிய வகையில் வழங்கினால் மட்டுமே அவை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும். அவ்வாறு இல்லையேல் கையளிக்கமாட்டேன்.
அரசாங்கம் அறிக்கைகளை வெளியிடாவிட்டால் நான் முன்கூட்டியே அறிவித்ததுபோல 7 நாட்களுக்குள் அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவேன். அச்சுறுத்தல்கள்மூலம் என்னை தடுக்க முடியாது. பேய்க்கு பயமெனில் சுடுகாட்டில் வீடு கட்டி வசிப்போமா என்ன? மக்களின் தகவல் அறியும் உரிமைக்காக நாம் என்றும் முன்நின்று செயற்படுவோம்.
இரு அறிக்கைகளையும் அரசாங்கம் வெளியிடாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை அவற்றை நான் நிச்சயம் வெளிப்படுத்துவேன். தேசிய பாதுகாப்புக்கு தாக்கம் செலுத்தும் என்பதால் இணைப்புகளை பகிரங்கப்படுத்தமாட்டேன்.
இந்நிலையில் மேற்படி அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்னர் அரச இரகசிய சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் என்னை கைது செய்வதற்கு உள்ள இயலுமை பற்றி அரசாங்க மேல் மட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.” – என்றார்.










