“எதிர்க்கட்சியில் இருக்கும்போது மக்களுக்கு கூறிய விடயங்களை ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தி செய்யாவிட்டால் குறுகிய காலப்பகுதிக்குள் மீண்டும் அறகலய ஏற்படக்கூடும்.” – என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயத் குமார தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“தேர்தல்களுக்கு பின்னர் நாம் வன்முறைகளில் ஈடுபட்ட தரப்பினர் கிடையாது. சிறந்த முன்னுதாரணத்தை வழங்கும் வகையிலேயே அனைத்து தேர்தல் வெற்றிகளினதும் பின்னர் நாம் செயற்பட்டுள்ளோம்.
நாட்டை முன்னேற்ற வேண்டுமெனில் தற்போது சிறந்த சந்தர்ப்பம் இவர்களுக்கு (தேசிய மக்கள் சக்தி) கிடைத்துள்ளது. எனவே, மக்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேற்றப்படாவிடின் குறுகிய காலப்பகுதிக்குள் மீண்டும் அறகலய ஏற்படக்கூடும்.
எமக்கும் 69 லட்சம் வாக்குகள் கிடைத்தன. கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் செயற்பட்டோம். எனினும், ஈராண்டுகளில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
தற்போது மக்கள் மத்தியில் நிறைய எதிர்பார்ப்பு உள்ளது. எதிர்க்கட்சியில் இருக்கும்போது தேசிய மக்கள் சக்தியினர் கூறிய விடயங்களை தற்போது ஆளுங்கட்சிக்கு வந்துள்ள நிலையில் செய்யாவிடின், மக்கள் குழப்பமடையக்கூடும்.” – என்றார்.