ஐக்கிய மக்கள் சக்தியுடன் முரண்பட்ட அக்கட்சியின் மகளிர் அணியின் தேசிய அமைப்பாளரான ஹிருணிக்கா பிரேமசந்திரவை கட்சி தலைவரான சஜித் பிரேமதாச சமரசப்படுத்தியுள்ளார் என தெரியவருகின்றது.
இதன் ஓர் அங்கமாகவே ஹிருணிக்காவின் பதவி விலகல் கடிதத்தை கட்சி ஏற்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் மகளிர் அணியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஹிருணிக்கா பிரேமசந்திர அறிவித்திருந்தார். இது தொடர்பான பதவி விலகல் கடிதத்தை கட்சி செயலாளருக்கு அனுப்பி இருந்தார்.
இந்நிலையிலேயே ஹிருணிக்காவை நேரில் அழைத்து பேசி, அவரை கட்சி தலைவர் சமரசப்படுத்தியுள்ளார். இந்த சந்திப்பின் பிறகு ஹிருணிக்கா பிரேமசந்திரவும், கட்சி செயலாளரும் இணைந்து கூட்டாக ஊடக சந்திப்பை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.










