பதுளையிலிருந்து நுவரெலியாவுக்கு விருந்துக்கு வந்த இளைஞர்கள் போதைப்பொருளுடன் கைது!

பதுளையில் இருந்து நுவரெலியா பகுதிக்கு டிஜே பார்ட்டிக்கு சென்று கொண்டிருந்த போது இளைஞர்கள் குழுவிடமிருந்து ஐஸ் , குஸ், ஹேஸ் மற்றும் போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து குறித்த இளைஞர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் பதுளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளையில் இருந்து நுவரெலியா விடுதி ஒன்றிற்கு டிஜே பார்ட்டி ஒன்றிற்கு இளைஞர்கள் குழுவொன்று செல்வதாகவும் அவர்களிடம் போதைப்பொருள் காணப்படுவதாகவும் பதுளை குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பதுளை பண்டாரவளை வீதி போகஹமடித்த பகுதியில் குறித்த வாகனங்களை நிறுத்தி மோப்ப நாயின் உதவியுடன் சோதனையை மேற்கொண்ட போது மூன்று நபர்களிடம் ஐஸ் 2830 மில்லிகிராம்,ஹேஸ் 840 மில்லிகிராம்,குஸ்130 மில்லிகிராம், மற்றும் போதை மாத்திரைகள் 22 ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வாகனங்களில் இருந்த பெண்கள் மற்றும் மேலும் சில இளைஞர்களையும் பதுளை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களிடமும் வாக்குமூலங்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் அவர்களை விடுவித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பதுளை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்ல, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த ஆகியோரின் ஆலோசனையின் பேரில் குறித்த இளைஞர்கள் மூவரிடமும் பதுளை பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சானக சிரஞ்சிவ விஜேரட்ன குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

குறித்த இளைஞர்களை விசாரணைகளின் பின்னர் பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles