யானை தாக்கி இளைஞன் பலி!

முல்லைத்தீவு, முத்தையன்கட்டு குளப் பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

முத்தையன்கட்டு குளப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரணுக்குக் கீழ் நேற்று மாலை 5.10 மணியளவில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையை விரட்டி வந்துள்ளனர். அவர்களுடன் இணைந்து மேற்படி இளைஞரும் யானையை விரட்ட முற்பட்டுள்ளார்.

இதன்போது அந்த இளைஞரை யானை தாக்கியுள்ளது. படுகாயமடைந்த இளைஞர் ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும் இடை வழியிலேயே உயிரிழந்தார்.

ஒட்டுசுட்டான், முத்துவிநாயகபுரம் பகுதியில் வசிக்கும்
கேந்திரராசா பிரசாத் என்ற 21 வயதுடைய இளைஞரே யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

அவரின் சடலம் ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles