வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் மழை தீவிரமடையும் என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும் வானிலையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் எதிர்வரும் 5ஆம் திகதி வரை இடையிடையே சிறிய மழை கிடைக்கும். எதிர்வரும் 6ஆம் திகதி முதல் மழை தீவிரமடையும். எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 23ஆம் திகதி அதிகாலை மற்றும் காலை வேளைகளில் குளிரான வானிலை நிலவும்.” – என்றார்.
அதேவேளை நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேலும், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் கனமழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது










