மலையக பெருந்தோட்ட மக்களுக்கு எதிராக அரசாங்கத்தின் நிர்வாகத்தின்கீழுள்ள, அரச பெருந்தோட்ட யாக்கம் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அநீதிக்கு எதிராக குரல் எழுப்பும் மக்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கையும் இடம்பெற்றுவருகின்றது. இதுதான் மலையகம்மீதான அரசின் அணுகுமுறையா என்று கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
” அரச பெருந்தோட்ட யாக்கத்தின் நிர்வாகத்தின்கீழுள்ள கோமர தோட்டம், நியூ துனிஸ்கல பிரிவிலுள்ள தொழிலாளர்களை, தோட்ட முகாமையாளர் தகாத முறையில் திட்டியுள்ளார். இது தொடர்பில் நியாயம் கேட்க சென்ற இளைஞர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தோட்ட நிர்வாகம் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் தோட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நியாயம் கேட்க செல்லும் இளைஞர்களை கைது செய்வதற்கு ஏற்பாடு செய்வதுதான் நியாயமான நடவடிக்கையா? அரச பெருந்தோட்ட யாக்கத்தை வழிநடத்துவது யார்? இது ஒரு சம்பவம்தான், தற்போது அரச பெருந்தோட்ட யாக்கத்தின்கீழ் இப்படி பல சம்பவங்கள் நடந்துகொண்டுதான் உள்ளன.
இவற்றுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களுக்கு அடக்குமுறை கையாளப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர்களை அடக்கி ஆள்வதற்காக அரச பெருந்தோட்ட யாக்கம் பயன்படுத்தப்படுகின்றதா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள்மீது தோட்ட நிர்வாகம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மீளப்பெற வேண்டும். இது தொடர்பில் அரசாங்கமும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அடக்கி ஆள்வது என்பது மாற்றம் அல்ல. இப்படியான மாற்றத்தை மக்கள் எதிர்பார்ப்பதும் இல்லை.” – என்றுள்ளது.
