அரசாங்கம் அறிவித்துள்ள தொழிலாளர்களின் சம்பள உயர்வை நான் வரவேற்கின்றேன். அதனை பிரதமர் நிதி அமைச்சர் என்ற வகையில் பெற்றுக் கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான எஸ் சதாசிவம் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்.
வெளிநாட்டவர்களின் நிர்வாகத்திற்கு பின்னர் பெருந்தோட்டங்களை அரசாங்கம் சுவீகரித்த போது தேயிலை தோட்டங்களின் முழு நிலமும் நிர்வாகமும் அரச பெருந்தோட்ட யாக்கம் ஜனவசம போன்ற நிறுவனங்களுக்கு பகிர்ந்து நிர்வகிக்கப்பட்டு வந்தது.
இக்காலப்பகுதியில் கூட தொழிலாளர்களுடைய சில நலன்புரி திட்டங்களும் வேதனமும் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவு புள்ளி அதிகரிப்புக்கு ஏற்ற வகையில் உயர்வு பெற்றிருந்தது. இதுவும் பல தொழிற்சங்க போராட்டத்திலேயே பெற்றுத்தரக் கூடியதாக இருந்தது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
கம்பனிகளின் ஒழுங்கற்ற நிர்வாகத்தால் தேயிலை காடாகி தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கும் தேன் பூச்சி கடிக்கும் சிறுத்தைகளின் தொல்லைகளுக்கு மத்தியிலும் பலர் உயிரிழந்ததையும் நாம் அறிவோம். இன்று தேயிலை தோட்டங்கள் இருக்கின்ற சூழ்நிலையில் தேயிலை கொழுந்தை அதிகரித்துத் தருமாறு கேட்பது வரட்டு மாட்டில் பால் கரப்பது போன்றதாகும்.
அதுமட்டுமல்லாது தோட்ட பிள்ளைகளுக்கு தான் அதிகமான மந்த போசனை இருப்பதாக சுகாதார அறிக்கைகள் கூறுகின்றன. தனியார் கம்பெனிகளில் தற்போது நலன்புரி வேலைகளை செய்வதில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.










