மஹிந்த தங்கியுள்ள அரச வீட்டின் மாத வாடகை பெறுமதி ரூ. 46 லட்சம்!

“ மாதம் 46 லட்சம் ரூபா வாடகை பெறுமதியுடைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தங்கியுள்ள அரச விதிவிடம் மீளப்பெறப்படும்.” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

களுத்துறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வீடு வழங்கப்படமாட்டாது என உறுதியளித்திருந்தோம். எதிர்காலத்தில் எனக்கும் வீடொன்று தேவையில்லை என தற்போதே கடிதம் வழங்கக்கூட நான் தயார்.
மஹிந்த ராஜபக்ச தற்போது தங்கியுள்ள வீட்டின் பெறுமதி தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்பட்டது. வீடு மாத்திரம் மதிப்பிடப்பட்டுள்ளது. காணி இன்னும் மதிப்பிடப்படவில்லை. வீட்டுக்குரிய மாத வாடகை 46 லட்சம் ரூபாவாகும்.

சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதிக்கு வீடொன்று வழங்கப்பட வேண்டும், அவ்வாறு இல்லையேல் சம்பளத்தில் மூன்றிலொரு பங்கு வழங்கப்பட வேண்டும். நாம் வீட்டை பெறுவோம். சம்பளத்தில் மூன்றிலொரு பங்கான 30 ஆயிரம் ரூபாவை வழங்குவோம். அவ்வாறு இல்லையேல் மிகுதி கட்டணத்தை மாதாந்த கூலியாக கட்டிவிட்டு அங்கு தங்கி இருக்கலாம். வாடகையை செலுத்தாவிட்டால் வெளியில் போடவேண்டிவரும்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியம் வெகுவிரைவில் இரத்து செய்யப்படும். அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய விலைக்கே நாடாளுமன்றத்தில் உணவு வழங்கப்படும். உணவின் விலை 2 ஆயிரம் ரூபாவெனில் அந்த விலைக்குதான் உணவை பெறமுடியும்.” என்றார்.

Related Articles

Latest Articles