26 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் மீண்டும் ஆட்சியமைப்பதற்குரிய மக்கள் ஆணையை பாரதிய ஜனதாக் கட்சி பெற்றுள்ளது.
70 தொகுதிகளில் 48 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்டையும் தலைநகரில் பாஜக அரயணையேறவுள்ளது.
22 தொகுதிகளை மட்டும் வசமாக்கவுள்ள ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை இழக்கிறது. முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் படு தோல்வியடைந்துள்ளார். காங்கிரசுக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் அதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்றுவந்தது.
70 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் திகதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், 60.42 சதவீத வாக்குகள் பதிவாகின.
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது. 70 தொகுதிகளில் மொத்தம் 699 வேட்பாளர்கள் களம் கண்டனர்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்துமே பாஜக வெற்றி பெறும் என்றே கூறியிருந்தன.
வெற்றிக்கு 36 தொகுதிகள் போதுமென்ற நிலையில் மாபெரும் வெற்றியை நோக்கி பாஜக முன்னேறியுள்ளது.
26 ஆண்டுகளுக்குப் பின்னர் டெல்லியை பாஜக கைப்பற்றியுள்ளது அக்கட்சியினரை கொண்டாட்ட மனநிலையில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், இது வளர்ச்சிக்கு, நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம் என்று முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.