உக்ரைனின் பங்கேற்பு இல்லாமல் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களை ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம் என்று அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் தொலைபேசியில் பேசியதை அடுத்து, இரு நாடுகளின் உயர்மட்ட குழுக்களின் சந்திப்பு நாளை சவூதி அரேபிய தலைநகரில் நடைபெற உள்ளது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தலைமையிலான ரஷ்ய குழுவும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தலைமையிலான அமெரிக்க குழுவும் குறித்த சந்திப்பில் பங்கேற்க இருக்கின்றன.
இந்த கலந்துரையாடல் தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ” அமெரிக்க – ரஷ்ய உறவுகளை மீட்டெடுப்பது, உக்ரைன் பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்து ஆலோசிப்பது, இரு நாடுகளின் ஜனாதிபதிகளின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வது ஆகியவை குறித்து சந்திப்பில் கவனம் செலுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஊடகங்களிடம் இன்று கருத்து வெளியிட்ட உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி,
‘ மேற்படி சந்திப்பு தொடர்பாக எமக்கு எதுவும் தெரியாது. இதில், உக்ரைன் பங்கேற்கவில்லை. உக்ரேனிய அதிகாரிகள் யாரும் இல்லாத நிலையில், இந்தப் பேச்சு எந்த முடிவுகளையும் தராது. வரும் 19-ம் திகதி நான் சவுதி அரேபியாவுக்கு பயணம் செய்கிறேன். ஆனால், அந்தப் பயணம் அமெரிக்க – ரஷ்யா கலந்துரையாடலுடன் தொடர்பில்லாதது” என குறிப்பிட்டுள்ளார்.