பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அரை இறுதிக்கு முன்னேற்றம்

நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்று போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது இந்திய அணி. விராட் கோஹ்லி
அபாரமாக விளையாடி சதம் விளாசினார்.

ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் அவருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதில் அந்த அணி 49.4 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சவுத் ஷகீல் 62 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரிஸ்வான் 46 மற்றும் குஷ்தில் ஷா 38 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹர்திக் பாண்டியா 2, அக்சர், ஹர்ஷித் ராணா மற்றும் ஜடேஜா தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது.

கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் இன்னிங்ஸை ஓபன் செய்தனர். ரோஹித் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த விராட் கோலி, கில் உடன் 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். கில், 46 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த ஸ்ரேயாஸ், கோலி உடன் சேர்ந்து 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 56 ரன்கள் எடுத்து ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தார். ஹர்திக், 8 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இறுதிவரை களத்தில் இருந்த கோஹ்லி
, 111 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அசத்தினார். அவரது இன்னிங்ஸில் 7 பவுண்டரிகள் மட்டுமே ஸ்கோர் செய்திருந்தார். இரண்டு கவர் டிரைவ்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியின் பந்து வீச்சும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்.

இந்தப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோஹ்லி
ஃபார்ம் குறித்த விமர்சனம் காட்டமாக முன்வைக்கப்பட்டது. அணியில் அவரது இருப்பு குறித்த கேள்வி கேட்கப்பட்டது. இந்த நிலையில் தான் பாகிஸ்தான் உடனான போட்டியில் சதம் விளாசி ஃபார்முக்கு திரும்பியுள்ளார். இந்தப் போட்டிக்கு முன்னதாக பயிற்சிக்கு முன்கூட்டியே கோஹ்லி வந்திருந்ததாகவும் தகவல் வெளியானது.

ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000+ ரன்களை கோஹ்லி
கடந்து சாதனை படைத்துள்ளார். 287 இன்னிங்ஸில் இந்த ரன்களை சாதனையை கோலி படைத்துள்ளார். இந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை கோலி வென்றார். ஒருநாள் கிரிக்கெட்டில் இது கோலியின் 51-வது சதம் ஆகும். அடுத்த போட்டியில் இந்திய அணி நியூஸிலாந்து அணியுடன் குரூப் சுற்றில் விளையாடுகிறது.

Related Articles

Latest Articles