துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் லீக் தொடரின் முதல் அரை இறுதி போட்டி (04)நடைபெற்றது.
இதில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் லீக் தொடரின் குரூப் B பிரிவில் முதலிடம் பிடித்த இந்திய அணியும் குரூப் A பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த அவுஸ்திரேலியா அணியும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் விளையாடின. இதில் டாஸ் வென்ற அவுஸ்திரேலியா அணி முதலில் தங்கள் துடுப்பெடுத்தாட அறிவித்தது. இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் கூப்பர் கான்லி 9 பந்துகளில் டக் அவுட் ஆகி முகமது ஷமியில் பந்துவீச்சில் வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் தனது அதிரடியை துவங்கினார்.
கடந்த ஒரு நாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியை மீண்டும் நினைவுபடுத்திய ஹெட், 33 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 39 ஒட்டங்களில் விளையாடிக் கொண்டிருந்த போது வருண் சக்கரவர்த்தி அவரை வீழ்த்தினார். அதற்குப் பிறகு அவுஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்மித் 73 ஒட்டங்கள், இறுதிக்கட்டத்தில் அலெக்ஸ் கேரி 61 ஒட்டங்கள் எடுக்க அவுஸ்திரேலியா அணி இறுதியில் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ஒட்டங்கள் குவித்தது.
இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இந்த முறை இந்திய அணியின் துணை கேப்டன் கில் 8 ஒட்டங்களில் ஆட்டம் இழக்க, மறுமுனையில் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 28 ஒட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் கூட்டணி அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை திறமையாக எதிர்கொண்டு விளையாடினார்கள். இந்த கூட்டணி 91 ஒட்டங்கள் எடுத்திருந்தபோது ஸ்ரேயாஸ் ஐயர் 45 ஒட்டங்களில் வெளியேற விராட் கோலி 84 ஒட்டங்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
அதற்குப் பிறகு விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் 34 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸ் என 42 ஒட்டங்கள் குவிக்க இறுதியாக இந்திய அணி 48.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 267 ஒட்டங்கள் குவித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்து இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலமாக கடந்த ஒரு நாள் உலகக் கோப்பையில் இறுதி போட்டியில் அவுஸ்திரேலியா அணியிடம் அடைந்த தோல்விக்கு இந்த ICC தொடரில் இந்திய அணி பழி தீர்த்துக் கொண்டது.