மொரிஷியஸ் நாட்டு சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இருநாடுகள் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மொரிஷியஸின் 57-வது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடி சென்றிருந்தார்.
தலைநகர் போர்ட் லூயிஸில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்பு அணிவகுப்பை பார்வையிட்டார்.
இரு நாட்டு குழுவினர் இடையே நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. வங்கி, வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்துறையில் இரு நாடுகள் இடையே ஒத்துழைப்பை பலப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.
இருநாடுகள் இடையேயான வர்த்தகத்தை உள்நாட்டு கரன்சியில் மேற்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கியும், மொரிஷியஸ் மத்திய வங்கியும் ஒப்பந்தம் செய்தன.
நீர் கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி அளிக்க மொரிஷியஸ் அரசு மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க இந்திய வெளியுறவு சேவை மையம், மொரிஷியஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்திய கடற்படை, மொரிசியஸ் காவல்துறை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
நிதிமுறைகேடு குற்றங்களை தடுக்க இந்தியாவின் அமலாக்கத்துறை, மொரிஷியஸின் நிதி தொடர்பான குற்றங்கள் ஆணையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மொரிஷியஸ் சுதந்திர தின விழாவில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருதான ‘தி கிராண்ட் கமாண் டர் ஆஃப் த ஆர்டர் ஆஃப் த ஸ்டார் அண்ட் கீ ஆஃப் த இண்டியன் ஓசன்’ அளித்து கௌரவிக்கப்பட்டது.