” வடக்கிலும், தெற்கிலும் அரச பயங்கரவாதத்தால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயல்பாடுகளுக்கு எதிராக இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசியல் நோக்கங்களுக்காகவே அறிக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு அவை பயன்படுத்தப்படவில்லை என்று முன்னிலை சோஷலிசக் கட்சியின் பிரதான செயலாளர் குமார் குணரத்னம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” 1971 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் அரச பயங்கரவாதம் இருந்துவருகின்றது. 80 ஆம் ஆண்டு காலப்பகுதி மற்றும் 30 வருடகால போர் என்பவற்றின்போது மனித உரிமைகள் மீறப்பட்டன. மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றன.
அல்ஜெஷீரா நேர்காணலின்போது வடக்கு மற்றும் தெற்கில் இடம்பெற்ற அடக்குமுறைகளை மறைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க முற்படுகின்றார். அடக்குமுறைக்கு உத்தரவிட்ட அரச தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை பாதுகாப்பதற்கு அவர் முற்பட்டுள்ளார்.
வடக்கிலும், தெற்கிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை அவர்களது உறவினர்கள் இன்னும் தேடிவருகின்றனர். தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது அவர்களுக்கு இன்னும் தெரியாமல் உள்ளது.
எந்த சூழ்நிலையிலும் அரசாங்கமொன்று, அரச பயங்கரவாதத்தை பயன்படுத்த முடியாது என பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குடியுரிமை நீக்கம் உட்பட பல பரிந்துரைகள் அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.
சிறிமாவோ பண்டாரநாயக்க இழைத்த போர்க்குற்றங்களுக்கு எதிராக ஜே.ஆர். ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசியல் காரணங்களுக்காகவே அவரது குடியுரிமை பறிக்கப்பட்டது.
அதேபோல சந்திரிக்கா ஆட்சியில் பட்டலந்த அறிக்கை இழுத்தடிக்கப்பட்டது. தேர்தல் வெற்றிக்காக அதனை சந்திரிக்கா பயன்படுத்தினார். மாறாக பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, அதிகாரத்தில் இருந்தவர்கள் அவர்களை பாதுகாத்தே வந்துள்ளனர்.
தற்போது ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சி உள்ளது. 88,89 காலப்பகுதியில் ஜே.வி.பியினரே அதிகம் பாதிக்கப்பட்டனர். அரசியல் செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டனர்.
எனினும், தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார பயணமும் ரணிலின் பாதையிலேயே உள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை. ஜனநாயக விரோத சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவும் இல்லை.
எனவே, பட்டலந்த அறிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, மீள நிகழாமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.” – என்றார்.