காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியதாக பாலஸ்தீனம் கூறியுள்ளது.
போர் நிறுத்த முயற்சிகளுக்கு மத்தியில் குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே இவ்வாறு உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினர், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து 2023 அக்டோபரில் தாக்குதல் நடத்தினர்.
இதில், 1200 பேர் கொல்லப்பட்டனர். 200 பேரை பிணைக்கைதிகளாக கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக 15 மாதங்களாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் காசாவில் 48 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்கா மற்றும் ஐ.நா.,வின் முயற்சியால் 42 நாட்களுக்கு இருதரப்புக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்போது போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டதாக இரு தரப்பிலும் குற்றம்சாட்டப்பட்டது.
இரண்டாம் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில், காசா பகுதியில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்த துவங்கி உள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி உள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மொத்தம் 50,021 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், அது மொத்த மக்கள் தொகையான 23 லட்சம் பேரில் 2.1 சதவீதம் அல்லது 46 பேரில் ஒருவர் எனக் கூறப்பட்டுள்ளது.