தமது நாட்டு தேர்தலில் சீனாவும், இந்தியாவும் தேர்தலில் தலையிட முயற்சிக்கக்கூடும் என கனடா உளவுத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்காவின் மற்றொரு மாகாணமாக கனடாவை சேர்க்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்து, ஏப்ரல் 28இல் தேர்தலை நடத்துவதாக கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே கனடாவின் உளவுத்துறை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கனடா பொதுத்தேர்தலில் சீனாவும், இந்தியாவும் தலையிட முயற்சிக்க வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் ரஷ்யாவும், பாகிஸ்தானும் அவ்வாறு செய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த தேர்தல்களில் சீனாவும், இந்தியாவும் தலையிட முயற்சி செய்தன. ஆனால் அவர்களின் தலையீட்டால் எந்த பாதிப்பும் இல்லை என உளவுப்பிரிவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதைய தேர்தலில் கனடாவின் ஜனநாயக செயல்பாட்டில் தலையிட முயற்சிக்க, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த வாய்ப்புள்ளது. கனடாவின் ஜனநாயக செயல்முறைகளில் தலையிடும் நோக்கத்தையும், திறனையும் இந்திய அரசாங்கம் கொண்டுள்ளது என்பதையும் நாங்கள் கண்டிருக்கிறோம்.
வெளிநாட்டு தலையீட்டு நடவடிக்கையால் தேர்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்துவது கடினம். அச்சுறுத்தல் நடவடிக்கைகள் கனடாவின் ஜனநாயக செயல்முறைகள் மற்றும் நிறுவனங்களின் நேர்மையின் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைத்துவிடும் எனவும் உளவு பிரிவால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.