தலவாக்கலை லிந்துலை மட்டுக்கலை தோட்டத்திலுள்ள காய்கறி தோட்டத்திற்கு அருகாமையில் சிறுத்தை ஒன்று கம்பி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ரந்தெனிகல கால்நடை பிரிவின் கால்நடை வைத்தியர் அகலங்க பினிடிய தெரிவித்தார்.
பன்றி போன்ற விலங்குகளை பிடிக்க வைக்கப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி உயிரிழந்த சிறுத்தையின் சடலம் (14) புத்தாண்டு தினத்தன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நன்கு வளர்ந்த ஆண் சிறுத்தை எனவும் ரந்தெனிகல கால்நடை பிரிவின் கால்நடை வைத்தியர் அகலங்க பினிடிய தெரிவித்தார். இறந்த சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக ரந்தெனிகல கால்நடை மருத்துவ பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிறுத்தை புலிகளின் இறப்புகளைக் குறைப்பதற்காக வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்ட பல்வேறு திட்டங்கள் காரணமாக, 2024 ஆம் ஆண்டில் நுவரெலியா ஹக்கல வனவிலங்குப் பிரிவிலிருந்து எந்தவொரு சிறுத்தை புலிகளின் இறப்பும் பதிவாகவில்லை என்றும், ஆனால் இந்த ஆண்டு இதுவரை இந்தப் பகுதியிலிருந்து மூன்று சிறுத்தை புலிகளின் இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
2024 ஆம் ஆண்டில் நாட்டில் 14 சிறுத்தை புலிகளின் இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும், இந்த ஆண்டின் கடந்த சில மாதங்களில் மட்டும் ஆறு சிறுத்தை புலிகளின் இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
தலவாக்கலை பி.கேதீஸ்
