‘எதிரணிகளை ஓரணியில் திரட்டி ரணில் முன்னெடுக்கும் அரசியல் சூழ்ச்சி வெற்றியளிக்காது. தேசிய மக்கள் சக்தி வென்றுள்ள 266 சபைகளில் நாம் ஆட்சியமைப்போம்.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அறுதிப்பெரும்பான்மை பலத்தை பெறாத உள்ளுராட்சிசபைகளில், எதிரணிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று முன்தினம் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சி ,
” தேசிய மக்கள் சக்தி 266 சபைகளில் வெற்றிபெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியால் 15 வரையான சபைகளிலேயே வெற்றிபெறமுடிந்தது. அந்த சபைகளிலும் தேசிய மக்கள் சக்திக்கு சமாந்தரமான ஆசனங்கள் உள்ளன.
எனவே, தேசிய மக்கள் சக்தி வென்றுள்ள சபைகளில் நாம் ஆட்சியமைப்போம். எதிரணிகளை மக்கள் தோற்கடித்துள்ளனர். எனவே, எதிரணிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க முற்படுவது மக்கள் விரோத செயலாகும். எனவே, மக்கள் ஆணையை நாம் நிச்சயம் பாதுகாப்போம்.” எனக் குறிப்பிட்டார்.
எதிரணிகள் இன்று வங்குரோத்தடைந்துள்ளன. எனவே, ரணில் தலைமையில் எதிரணிகள் முன்னெடுக்கும் முயற்சி கைகூடாது.
நாட்டுக்காக முன்னிலையாகும் சுயாதீன நபர்கள் எமக்கான ஆதரவை வெளிப்படுத்தலாம்.” -எனவும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.
