ஜனாதிபதியின் கோரிக்கைக்கு சில அதிகாரிகள் முட்டுக்கட்டை – ஆளுநர் வேதநாயகன் சுட்டிக்காட்டு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வடக்கு, கிழக்கு மாகாணங்களைத்  துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தபோதும், கொழும்பிலுள்ள சில திணைக்களங்களின் அதிகாரிகள் அவற்றுக்கு முட்டுகட்டை போடும் விதத்தில் செயற்படுகின்றனர் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டினார்.

உலக வங்கியின் இலங்கை நாட்டுக்கான செயற்பாட்டு முகாமையாளர் அபிட் கலி செயற்றிட்ட தலைவர் காயத்திரி சிங் உள்ளிட்ட உலக வங்கிக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது ஆளுநர் உரையாற்றும்போது,

“கடந்த 3 தசாப்தங்களாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் போரால் பாதிக்கப்பட்டிருந்தன. இந்தக் காலப் பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு எந்தவொரு உதவிகளும் கிடைக்கப்பெறவில்லை என்பதுடன் இங்கிருந்த உட்கட்டுமானங்களும் முழுமையாக அழிவடைந்திருந்தன. இந்தநிலையிலேயே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உலக வங்கியை வடக்கு, கிழக்கின் துரித அபிவிருத்தியில் கவனம் செலுத்துமாறு கோரியிருந்தார்.

அதற்கு அமைவாக உலக வங்கிக் குழுவினர் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குப் பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களையும் பார்வையிட்டிருக்கின்றனர். அதற்கு அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

போரால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கை ஒருபோதும் வந்து பார்வையிடாத அதிகாரிகள் சிலர் கொழும்பிலிருந்து கொண்டு உலக வங்கியின் திட்டங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு ஏன் வழங்கப்படுகின்றன என்று கேள்வி எழுப்புவது பொருத்தமற்றது. அவர்களும் இங்கு வந்து நிலைமைகளைப் பார்வையிட்டால் எமது கோரிக்கைகளின் நியாயத்தன்மையை ஏற்றுக்கொள்வார்கள்.

உலக வங்கி சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துகின்றது.

யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகள் சுற்றுலாத்துறைக்குரிய வளத்தைக் கொண்டிருக்கின்றன. ஆனால்,  அங்குள்ள இறங்குதுறைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை அபிவிருத்தி செய்தாலே அதிகளவு சுற்றுலாவிகளை கவர முடியும்.

அதேபோல் வடக்கு – கிழக்குக்கான பயண நேரத்தையும் – தூரத்தையும் சுருக்கும் வகையில் கொக்கிளாய் – புல்மோட்டைப் பாலம் அமைக்கப்பட வேண்டும். ஏ – 9 வீதி எவ்வாறு சுற்றுலாவிகளுக்காக இலகுவாக்கப்பட்டுள்ளதோ அதேபோன்று வடக்குக்கு வரும் சுற்றுலாவிகள் கிழக்குக்கும், கிழக்குக்கு வரும் சுற்றுலாவிகள் வடக்குக்கும் வருவதற்கான வழிகளும் இலகுவாக்கப்பட வேண்டும்.” – என்றார்.

ஆளுநரின் ஆலோசனைக் குழு உறுப்பினர் கலாநிதி அகிலன் கதிர்காமர், உலக வங்கியின் திட்டங்கள் ஊடாக வேலைவாய்ப்புக்கள் எவ்வாறு உருவாக்கப்படப் போகின்றன என்பது தொடர்பிலும் கேள்வி எழுப்பினார்.

உலக வங்கிக் குழுவினருடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஆளுநருக்கு நன்றிகளைத் தெரிவித்த உலக வங்கியின் இலங்கை நாட்டுக்கான செயற்பாட்டு முகாமையாளர் அபிட் கலி, மாகாணத்தால் வேலைத்திட்டங்களை முன்னுரிமைப்படுத்துமாறும், கால எல்லையை நிர்ணயித்துச் செயற்படுவோம் எனவும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் இணைப்புச் செயலாளர்களும் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles