“ கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியத்துக்கே மக்கள் ஆணை வழங்கினார்கள். இந்த ஆணையை மீறும் வகையில் எவரும் செயற்பட முடியாது.”
– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ். தாவடியில் அமைந்துள்ள பொக்ஸ் விடுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு கூறினார்.
“ நாம் கொள்கை அடிப்படையிலான இணக்கப்பாட்டை இந்தப் பேச்சின்போது வலியுறுத்தினோம். அதில் எந்த இணக்கமும் எட்டப்படவில்லை.
அந்த இணக்கப்பாடின்றி வெறுமனே சபைகளை கைப்பற்றுவதற்காக மட்டும் நாம் இணைய முடியாது.
எனவே, ஒரு தலைப்பட்சமாக நாம் ஒரு முடிவு எடுத்துள்ளோம். முன்னர் கூறியது போன்று முதலிடத்தில் இருக்கும் கட்சி தவிசாளர் பதவியைப்பெறவும், இரண்டாவது இடம்பெற்ற கட்சி உப தவிசாளர் பதவியைப் பெறவும் நாம் ஆதரவளிப்போம்.” – என கஜேந்திரகுமார் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.