அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் – தொழிலதிபர் எலான் மஸ்க் இடையேயான மோதல் பொதுவெளியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
“ எலான் மஸ்க் உடன் எனக்கு சிறந்த நட்பு ரீதியிலான உறவு இருந்தது. ஆனால், இனியும் நாங்கள் அப்படி இருப்போமோ, இதை தொடருவோமோ என எனக்கு தெரியவில்லை. மஸ்க் மீது நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன்” என ‘தி ஓவல்’ அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது ட்ரம்ப் தெரிவித்தார். இது நேரலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
“எல்லோரையும் விட இந்த புதிய மசோதா குறித்து மஸ்க் முழுவதுமாக அறிவார். அதன் உள் விவரங்களையும் அவர் நன்கு தெரியும். இந்தச் சூழலில் திடீரென்று இப்போது அவருக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. மஸ்க் எனக்கு எதிராக இருப்பது குறித்து நான் பொருட்படுத்தவில்லை. ஆனால், அவர் இதை முன்பே செய்திருக்க வேண்டும்” என ட்ரம்ப் கூறினார்.
உடனடியாக, நிகழ்நேரத்தில் எக்ஸ் வலைதளத்தில் ட்வீட் மூலம் மஸ்க் பதிலடி கொடுத்தார்.
ஜனாதிபதி ட்ரம்ப்பின் புதிய வரி சட்டமூலத்துக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார் மஸ்க்.
தொடர்ந்து அமெரிக்க அரசு செயல்திறன் துறையின் சிறப்பு ஊழியர் பொறுப்பில் இருந்து அண்மையில் அவர் விலகினார்.
“நான் மட்டும் இல்லையென்றால் 2024 ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் தோற்றிருப்பார். அவர் நன்றி இல்லாதவர். ட்ரம்ப் பொய் சொல்கிறார். அந்த சட்டமூலம் எனது பார்வைக்கு கிடைக்கவில்லை. இது இந்த ஆண்டின் பிற்பாதியில் பொருளாதார மந்த நிலையை உருவாக்கும்.
ஜனாதிபதி ட்ரம்ப் எனது நிறுவனங்களின் அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து பேசினார். அந்த வகையில் ஸ்பேஸ்-எக்ஸின் டிராகன் விண்கலன் திட்டம் சார்ந்த செயல்பாடுகளை உடனடியாக நிறுத்துகிறது” என மஸ்க் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதி ட்ரம்ப்பை நீக்கிவிட்டு துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் தெரிவித்திருந்தார். ‘ஆம்’ என அதற்கு பதில் கொடுத்துள்ளார்.
மேலும், அமெரிக்காவில் புதிய கட்சியை உருவாக்க வேண்டுமா என்பது குறித்து எக்ஸ் தளத்தில் வாக்கெடுப்பு ஒன்றையும் மஸ்க் முன்னெடுத்துள்ளார்.