12 ஆயிரம் கி.மீ வரை தாக்கும் அணுவாயுத ஏவுகணை சீனா வசம்!
அணு ஆயுதங்கள் பற்றிய தகவல்களை மறைத்து வைத்திருந்த சீனா முதன் முறையாக தற்போது தன்னுடைய சக்தி வாய்ந்த அணுவாயுதத்தை உலகத்திற்கு காட்டியிருக்கிறது.
இது 12 ஆயிரம் கி.மீ வரை சென்று துல்லியமாக இலக்கை தாக்கும்.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான தூரம் இதைவிட குறைவு என்பதால், அமெரிக்கா சற்றே பதற்றமடைந்திருக்கிறது.
ஆயுத மோதலை சீனா இதுநாள் வரை விரும்பியதில்லை. பொருளாதாரத்தை வைத்துக்கொண்டு சண்டை செய்து வந்த இந்த நாட்டை, அமெரிக்கா இப்போது ஆயுத களத்தில் இறக்கிவிட்டிருக்கிறது.
சீனாவின் அணு ஆயுதம் குறித்து அந்நாட்டின் செய்தி ஊடகமான சிஜிடிஎன், வீடியோவை வெளியிட்டிருந்தது.
அதில், இந்த அணு ஆயுதத்தின் பெயர் ‘டி.எப்-5’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இது கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையை சேர்ந்த ஏவுகணையாகும்.
இதை ஏன் சீனா பகிரங்கமாக வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தியது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. தாய்வானுக்கு அருகில் உள்ள அனைத்து தீவுகளிலும் இராணுவ தளபாடங்களை சீனா குவித்து வருகிறது.
என்னதான் இந்த ஏவுகணை அமெரிக்காவைத் தாக்கும் என்றாலும், ஆசியாவில் அமெரிக்கா சுமார் 41 இராணுவ முகாம்களை கொண்டிருக்கிறது. இதுவே சீனாவுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கும்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை சீனாவுடன் மறைமுகமாக மோதி வந்த அமெரிக்கா, 2 ஆண்டுகளாக தைவான் விஷயத்தின் மூலம் நேரடி மோதலுக்கு தயாராகி வருகிறது. தைவான் தனி நாடு என்று அமெரிக்கா கூறுகிறது. ஆனால், அது சீனாவின் ஒரு பகுதிதான் என்று சீனா திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது.
இதை வைத்து ஆசியாவில் சீனாவின் பலத்தை பரிசோதித்து பார்க்க சீனா தயாராகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.