ஈரான்-இஸ்ரேல் போருக்கு பின் முதன்முறையாக ஈரானின் அதியுயர் தலைவர் பொதுமக்கள் மத்தியில் தோன்றியுள்ளார். போரின்போது அவரை இஸ்ரேல் குறிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈரான்மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13-ஆம் திகதி திடீரென தாக்குதலில் ஈடுபட்டது.
ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேலுடன், அமெரிக்காவும் இணைந்து கொண்டது. இதில், ஈரானின் 3 முக்கிய அணு உலைகளை இலக்காக கொண்டு அமெரிக்கா தாக்கியது.
எனினும், இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்பே எடுத்து விட்டோம் என ஈரான் பதிலளித்தது.
ஆனால், அமெரிக்காவுக்கு பேரழிவு காத்திருக்கிறது என ஈரான் எச்சரித்தது. தொடர்ந்து பதில் தாக்குதலையும் தீவிரப்படுத்தியது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் படைகள் நிறுத்தப்பட்ட நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்கியது. இதில் கத்தார் நாடும் தாக்கப்பட்டது.
எனினும், ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே 12 நாள்கள் போர் நடந்து, அமெரிக்காவின் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அது முடிவுக்கு வந்தது.
போரின்போது ஈரான் உச்ச தலைவர் பாதுகாப்பான பகுதிக்கு சென்று விட்டார். பதுங்கு குழியில் அவர் தங்கி விட்டார் என தகவல்கள் பரவின. ஆனால், அதனை அந்நாட்டு ஊடகம் உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில், இந்த போருக்கு பின்னர் காமேனி முதன்முறையாக வெளியே தோன்றும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
தெஹ்ரானில் உள்ள அவருடைய அலுவலகம் மற்றும் வீடுக்கு அருகே மசூதி ஒன்றிற்குள் நுழைந்து அமரும் காட்சியை ஈரானின் தொலைக்காட்சி வெளியிட்டு உள்ளது.
அவர் கூட்டத்தினரை நோக்கி கையசைத்தும், கோஷம் எழுப்பிய மக்களை நோக்கி தலையாட்டியபடியும் சென்றார். அப்போது, அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் உள்ளிட்ட பலரும் அவருடன் இருந்தனர்.