குருவிட்ட யுவதி கொலை: வெளியாகும் பகீர் தகவல்கள்!

இரத்தினபுரி, குருவிட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெவிபஹல – தொடன்எல்ல வீதியில் கழுத்து அறுக்கப்பட்டு யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 17 வயதுடைய சிறுவன் ஒருவன் குருவிட்ட பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குருவிட்ட, தெவிபஹல – தொடன்எல்ல வீதியில் கடந்த புதன்கிழமை (02) மாலை இனந்தெரியாத நபரொருவர் யுவதி ஒருவரின் கழுத்தை வெட்டி அவரது கழுத்தில் இருந்த தங்க மாலையை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

காயமடைந்த யுவதி இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் குருவிட்ட – தெவிபஹல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய யுவதி ஆவார்.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கடந்த வியாழக்கிழமை (03) குருவிட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த 17 வயதுடைய சிறுவன் ஒருவனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், யுவதியின் கழுத்தை வெட்டி தங்க மாலையை கொள்ளையிட்டுச் சென்ற சந்தேக நபர் குறித்த சிறுவன் என தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில்,
சிறுவன் கொலைசெய்யப்பட்ட யுவதியை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ள நிலையில் அதற்கு அந்த யுவதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

சம்பவத்தன்று யுவதி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் சிறுவன், யுவதியை வழிமறித்து தன்னை காதலிக்குமாறு கோரியுள்ளார்.

ஆனால் யுவதி மீண்டும் மறுப்பு தெரிவித்ததால் சிறுவனுக்கும் யுவதிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறின் போது சிறுவன், யுவதியின் கழுத்தை வெட்டி அவரது தங்க மாலையை கொள்ளையிட்டுச் சென்றதாக“ பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை (04) இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles