வவுனியா, சூடுவெந்தபுலவு, மினாநகர் மக்கள் தமது பிரதான வீதியைப் புனரமைத்துத் தருமாறு கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மினாநகர் பிரதான வீதியானது நெளுக்குளம் – நேரியகுளம் வீதியில் சந்திக்கும் சந்தியில் இந்தப் போராட்டம் இன்று இடம்பெற்றது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
“சூடுவெந்தபுலவு, மினாநகர் கிராமமானது 2013 ஆம் ஆண்டு குடியேற்றம் செய்யப்பட்ட கிராமம் ஆகும். இந்தக் கிராமத்தின் பிரதான வீதியானது 12 வருடங்களாகப் புனரமைப்பு செய்யப்படாமல் உள்ளது. தினசரி கல்குவாரி டிப்பர் வாகனம் செல்வதால் கிராமத்தின் பிரதான வீதியானது சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.
இங்கு சுமார் 200 இற்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருவதுடன், தினமும் 50 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள், நோயாளிகள் எனப் பலரும் இந்த வீதியால் பயணிக்கின்றனர். அண்மையில் ஒரு மாணவன் மோசமான நிலையில் விபத்துக்குள்ளாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே, எங்களுக்கு இந்த வீதி தொடர்பான தெளிவை ஏற்படுத்தி வீதியைச் சிறப்பான முறையில் அமைத்துத் தந்து கல்குவாரி செல்லும் கனரக வாகனங்களுக்கு வேறு பாதை அமைத்துத் தருமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.
கவனவீர்ப்புப் போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வருகை தந்த ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முத்து முகமது, செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளர் இம்தியாஸ் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் ஆகியோர் மக்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்ததுடன், செட்டிகுளம் பிரதேச சபை ஊடாகக் குறித்த வீதியைப் புனரமைத்து தருவதாகவும், கல்குவாரி தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றிருந்தனர்.