” கச்சத்தீவு பிரச்னையில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.” – என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
” மீனவர்களின் நலனுக்காக அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசால் எடுக்கப்படுகிறது.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதற்கு, நிரந்தர தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று, பிரதமரிடம் வலியுறுத்தி வருகிறேன். கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி சட்டசபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.” – எனவும் தமிழக முதல்வர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மீட்க, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழர்கள் மீதும், தமிழக மீனவர்கள் மீதும் சிறிதும் அக்கறையில்லாத மத்திய பாரதிய ஜனதாக் கட்சி அரசு கச்சத்தீவை தாரை வார்த்தது யார் என்று அரசியல் மட்டும் தான் செய்கிறது.
10 ஆண்டுகளுக்கு மேல் பா.ஜ.க.தான் மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இதுவரை கச்சத்தீவை மீட்க, மத்திய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதை தடுக்கவோ, படகுகளை மீட்கவோ முயற்சி எடுக்கவில்லை.” – எனவும் குற்றஞ்சாட்டினார்.
‘கச்சத்தீவு கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைகின்றனர். கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம்’ என, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் பேசி இருக்கிறார். அதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இதுவரை எந்த பதிலும் தரவில்லை. பிரதமர் இப்பிரச்னையில் நேரடியாக தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்காக தமிழக அரசும், தி.மு.க.,வும் தொடர்ந்து போராடும்.” என ஸ்டாலின் மேலும் குறிப்பிட்டார்.