முன்னாள் எம்.பிக்களுக்குரிய ஓய்வூதியம் விரைவில் இரத்து!

” முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும்.” – என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

கண்டி மற்றும் கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகைகள்தவிர ஏனைய அனைத்து ஜனாதிபதி மாளிகைகளும் நாடு மற்றும் நாட்டு மக்களின் நலன்களுக்காக சிறந்த முதலீட்டு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளன எனவும் அவர் கூறினார்.

அமைச்சர் நேற்று நெடுந்தீவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். மக்கள் அமைப்புகள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடி, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டார்.

நெடுந்தீவு பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் விளக்கமளித்தார்.

அதன்பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர்,

” தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் ஊழல்வாதிகள் மற்றும் மோசடியாளர்கள் தப்பவே முடியாது. ஊழல் அரசியல் கலாசாரத்துக்கு முடிவு கட்டவே நாம் ஆட்சிக்கு வந்தோம். அதற்கே மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். அதற்கமைய ஊழல்களில் ஈடுபட்ட மோசடியாளர்கள் தற்போது சட்டத்தின் பிடிக்குள் சிக்கியுள்ளனர்.

நாம் சட்ட விவகாரத்தில் தலையிடவில்லை. சட்டம் தனக்குரிய வகையில் தனது கடமையை நிறைவேற்றும்.

அதேபோல மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாம் நிச்சயம் கட்டம், கட்டமாக நிறைவேற்றுவோம். இது தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை ஒரே இரவில் நிறைவேற்றிவிட வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். அது தவறு.

அதேவேளை, வறுமையின் கோரப்பிடிக்குள் இருந்து மக்களை மீட்பதற்காக சமூக சக்தி வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அரசியல், பொருளாதார மற்றும் சமூக மேம்பாடே எமது இலக்கு. அந்த சமூகமேம்பாட்டு திட்டத்தை வறுமை நிச்சயம் ஒழிக்கப்படும். அதற்குரிய வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. ” – என்றார் அமைச்சர்.

 

Related Articles

Latest Articles