பங்களாதேஷ் விமானப் படையின் பயிற்சி விமானம் டாக்காவில் உள்ள ஒரு பாடசாலை கட்டிடத்தின் மீது மோதியதில் 16 மாணவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
“இன்று மதியம் 1:06 மணிக்கு ஒரு பயிற்சி விமானம் புறப்பட்டு சிறிது நேரத்திலேயே பாடசாலை கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது” என்று பங்களாதேஷ் பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் பாடசாலை வளாகத்தில் இருந்த 16 மாணவர்கள், விமானி முகமது டூகிர் இஸ்லாம் மற்றும் இரண்டு ஆசிரியர்களும் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
விமானம் ஒரு பெரிய சத்தத்துடன் விழுந்து உடனடியாக தீப்பிடித்ததாக அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இந்த சம்பவத்துக்கு ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விமானப் படை, மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மைல்ஸ்டோன் பள்ளி ஊழியர்கள் மற்றும் இந்த விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ஈடுசெய்ய முடியாதது. இது தேசத்துக்கு ஆழ்ந்த வேதனையான தருணம்” என்று தெரிவித்துள்ளார்.