ஒரு கிராமசேவகர் பிரிவில் ஒரு விளையாட்டுக்கழகம் மாத்திரமே பதவி செய்ய முடியும் என்ற இளைஞர் சேவை மன்றத்தின் வர்த்தமானி அறிவிப்பினால் மலையக பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. அதனால் அரசாங்கம் இந்த வர்த்தமானி அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) கல்வி மறுசீரமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
மலையக தோட்டப்புறங்களில் 1947 முதல் 1977 வரை இலவச கல்வி மறுக்கப்பட்டிருந்தது. பெருந்தோட்ட நிறுவனங்களால் நடத்தப்பட்ட பாடசாலைகளில் 5ஆம் தரம் வரையிலே கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. என்றாலும் அரசியல் தலைவர்களின் அழுத்தங்கள் காரணமாக 1977ல் தோட்ட பாடசாலைகள் அரசாங்கத்துக்கு கீழ் எடுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டன.
ஆனால் இன்றும் அங்கு உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதற்கு பிரதான காரணம் யார் அரசாங்கத்துக்கு வந்தாலும் மலையத்துக்கு ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லை.அதனாலே மலையக அரசியல் வாதிகளுக்கு அங்கு போதுமான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போயிருக்கிறது. என்றாலும் எமது மூத்த அரசியல் வாதிகளின் சாணக்கியம் மற்றும் தோடர் அழுத்தங்கள் காரணமாகவே ஒருசில அபிவிருத்திகள் இடம்பெற்றிரு்க்கின்றன. சிறிபாத கல்வியியற் கல்லூரி மலையகத்தில் அமைக்கப்பட காரணம் செளமிய மூர்த்தி ஐயாவின் முயற்சியால் ஆகும்.
அத்துடன் மலையக மக்களுக்கு 30 வருடங்களாக பிரஜா உரிமை இல்லாமல் இருந்த காரணத்தினால் அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு வந்தன. அதனாலே மலையகம் பின்னடைவுக்கு செல்ல காரணமாகும். தற்போது இளைஞர் சேவை மன்றத்தின் வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் இளைஞர் சேவை மன்றத்தின் யாப்பின் பிரகாரம் தோட்டப்புறமாக இருந்தாலும் கிராமப்புறமாக இருந்தாலும் விளையாட்டு கழகங்களை பதிவு செய்ய முடியும். ஆனால் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவிப்பில், ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு ஒரு விளையாட்டு கழகமே பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யும்போது எமது பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும்.
இவ்வளவு காலமும் எந்த பிரச்சினையும் இல்லாமல் செயற்பட்டு வந்த இந்த விடயம் இது. ஏன் இவ்வாறானதொரு தீர்மானம் மேற்கொண்டு பிரச்சிகளை உருவாக்குகிறீர்கள். எனவே தயவு செய்து, அமைச்சரவையில் பேசி, இந்த வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் வாபஸ்பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் மலையத்தில் இந்த வருடம் 4500 வீடுகளை கட்டுவதாக பெருந்தோட்ட அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த வருடத்துக்கு வீடு கட்டுவதற்காக 329 மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுன்னதாக குறித்த அமைச்சர் தெரிவித்திருந்தார். ஒரு வீடு கட்டுவதற்கு 28 இல்சம் ரூபா தேவைப்படும் நிலையில், 329 மில்லியன் ரூபாவில் எவ்வாறு 4500 வீீடுகளை கட்ட முடியும் என கேட்கிறேன். 2இலட்சத்தி 51ஆயிரம் குடும்பங்கள் அங்கு இருக்கின்றன. அதனால் வீடுகளை கட்டி மலையகத்தை அபிவிருத்தி செய்ய முடியாது. மலையக மக்களுக்கு வீடு கட்டிக்கொடுப்பது, அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு அல்ல. அது சலுகை. அவர்களுக்கு தீர்வு வழங்குவதாக இருந்தால், அவர்களுக்கு காணி உரிமை வழங்க வேண்டும். அவர்கள் தற்போது வாழும் இடத்தையே கேட்கின்றனர். மக்களுக்கு காணி உரிமையை கொடுத்தால், அவர்கள் வீடுகளை கட்டிக்கொள்வார்கள்.
அதேநேரம் மலைய மக்களுக்கு அடுத்துவரும் நாட்களில் காணி உரிமை வழங்கப்போவதாக அரசாங்க பிரதிநிதிகள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் வழங்கப்போவது, ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளுக்கான உரிமை பத்திரம். அது காணி உரிமை பத்திரம் அல்ல. விட்டுரிமை பத்திரமாகும். காணி உரிமை என்பது ஒரு சமூகத்துக்கு கிடைக்கின்ற தீர்வு.
அதேபோன்று மலையகத்தில் அதிகமான பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. அதேபோன்று ஆசிரியர் பற்றாக்குறைகள் இருக்கின்றன. அவற்றுக்கும் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.