சமஷ்டி தீர்வுகோரி மன்னாரில் போராட்டம்!

இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத, சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இன்றைய தினம் (7) மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்துக்கு, மீளப் பெற முடியாத வகையில், சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை வலியுறுத்தும் வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் மூன்றாவது ஆண்டு தொடர்ச்சியும் மற்றும் அதனுடன் தொடர்புடைய கவனயீர்ப்புப் போராட்டமானது 100 நாள் செயல்முறையில் 7வது நாளான இன்று மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அந்தோனியார் புரம் பகுதியில் நடத்தப்பட்டது.

“சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வே தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஒரே தீர்வாகும்” என்ற ஒரே கோசத்துடன் இந்த போராட்டம் பெரும் எண்ணிக்கையான மக்களின் பங்கேற்பில் நடைபெற்றது.

இதன் நோக்கமானது, தமிழர்களின் அரசியல் உரிமைகள் தொடர்பில் மறுபடியும் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் கவனிக்கப்படவேண்டும் என்பதேயாகும்.

தொடர்ச்சியாக, 100 நாட்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் இத்தரப்பினரால் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அவ்வரிசையில், இன்றைய போராட்டத்தின் இறுதியில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் வாசிக்கப்பட்டது.

இந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனைவின் 5வது வருடம் இலங்கையின் இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வே அவசியம்.

1948க்குப் பின்னரான இலங்கையின் 75 வருடகால அரசியல் வரலாற்றில், இனத்துவ அரசியலே மேலோங்கிக் காணப்படுகிறது.

இலங்கை அரசானது சிங்கள பெரும்பான்மை இனத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசாங்கங்களாலும் தலைவர்களாலும் ஆளப்பட்டு வருகிறது.

1908 முதற்கொண்டு ஏனைய தேசிய இனங்களான வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையகத் தமிழ் மக்கள் ஆகியோருக்கு அரச அதிகாரத்தில் உரிய பங்கு வழங்கப்படவில்லை. அரசியல் அதிகாரம் உரிய முறையில் பகிர்ந்துகொள்ளப்படவில்லை. மாறாக, மொழி ரீதியான, மத ரீதியான அடக்குமுறைகள் மேலோங்கின.

சுதந்திரம் கிடைத்து ஒரு வருடம் நிறைவடைவதற்குள் மலையகத் தமிழர்களுக்கு எதிராக 1948ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து, வடக்கு – கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், தமிழர்களுக்கு எதிராக 50களில் கிழக்கிலும், மலையகப் பகுதிகளிலும், தெற்கிலும் மேற்கொள்ளப்பட்ட இன வன்முறைகள், சுதந்திரத்துக்குப் பின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் புறக்கணிக்கப்பட்டமை என இனவாதம் விரிவாகியது. அதன் உச்சமாக 1956இல் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டமானது அரச கட்டமைப்பை சிங்களமாக்கியது. இதுவே வடக்கு – கிழக்கு தமிழர்கள் தமக்கான “சமஷ்டி” முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வை கோரக் காரணமானது.

Related Articles

Latest Articles