காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல்களில் உணவுக்காக காத்திருந்த 31 பேர் உட்பட 89 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 513 பேர் காயமடைந்துள்ளனர்.
கடுமையான பசியால் வாடும் காசாவில் இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் ஐந்து பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதன் மூலம்103 குழந்தைகள் உட்பட பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை காசா மருத்துவமனை மீது நடந்த தாக்குதலில் 5 அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதேவேளை காசா மக்களுக்கு உதவி வழங்குவதற்கு வெளிநாட்டு குழுக்களை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
காசாவில் பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது, இது தடுக்கப்பட வேண்டும். அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனடா, பிரான்ஸ் உட்பட 23 நாடுகளுடன் இணைந்தே இந்த வலியுறுத்தலை ஆஸ்திரேலியா விடுத்துள்ளது.