” ஆளுநர்கள் ஊடாக மாகாண சபைகளை ஆள்வது தவறாகும். எனவே, அடுத்த வருடம் முற்பகுதியில் அரசாங்கம் தேர்தலை நடத்த வேண்டும்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு வலியுறுத்தினார்.
” நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு 5 வருடங்கள் போதாது, 15 வருடங்கள் தேவையென சீன தலைவர்கள் கூறினார்கள் என ஜே.வி.பின் செயலாளர் நாயகம் கூறியுள்ளார். 15 வருடங்கள் ஆளவேண்டுமெனில் அதற்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
குறைந்தபட்சம் மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் மக்கள் எந்தநிலைப்பாட்டில் உள்ளனர் என்பது இந்த அரசாங்கத்துக்கு தெரியவரும். எனவே, அடுத்த வருடம் முற்பகுதியில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம்.
மாகாணசபை முறைமையென்பது அரசமைப்பின் ஓர் அங்கமாகும். எனவே, அத்தேர்தலை நடத்த வேண்டும் என்பதே வடக்கு மற்றும் தெற்கு மக்களின் கோரிக்கையாக உள்ளது.” -எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.