முல்லைத்தீவில் இராணுவத்தால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமையைக் கண்டித்தும், அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம் மற்றும் இராணுவ அடக்குமுறை என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வடக்கு – கிழக்கில் நாளை ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று யாழ்ப்பாணம் மாநகர மேயர் திருமதி மதிவதனி விவேகானந்தராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
‘ தமிழர் தாயகமாக வடக்கு – கிழக்கில் அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம் காணப்படுகின்றது. இதை எதிர்த்து தமிழர் தாயகத்தில் நாளை திங்கட்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எமது தமிழர் பிரதேசங்களில் இராணுவ அடக்குமுறைகள் முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும். தமிழர் நிலங்களில் இருந்து இராணுவம் முற்றாக வெளியேற வேண்டும்.” – எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை, குறித்த போராட்டத்துக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பனவும் ஆதரவு தெரிவித்துள்ளன.