காசாவில் இருக்கும் அனைவரும் வெளியேறுங்கள்: இஸ்ரேல் ராணுவம் உத்தரவு!

 

முழுமையான ராணுவ நடவடிக்கை தொடங்க இருப்பதால், காசா திட்டுப்பகுதியில் வசிக்கும் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2023 ஒக்டோர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்திய கோரத் தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர்.
நூற்றுக்கணக்கான பேர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

அப்போது தொடங்கிய இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே வருகிறது. அவ்வப்போது பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டாலும், இன்னும் 48 பேர் ஹமாஸ் பிடியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அவர்களில் ஒருவர், எலும்புக்கூடு போல் இருக்கும் வீடியோவும், அவர் தன் சவக்குழியை தானே தோண்டுவது போன்ற வீடியோவும் சமீபத்தில் வெளியாகி இஸ்ரேலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இப்படி சிறை வைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகள், காசா பகுதியில் அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க வேண்டுமெனில், காசாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் சல்லடை போட்டு தேடினால் மட்டுமே முடியும் என்ற நிலை உள்ளது.

இதனால் அந்த முடிவுக்கு வந்துள்ள இஸ்ரேல், ஹமாஸ் குழுவை முற்றிலும் அழித்தே தீருவோம் என்று கங்கணம் கட்டி செயல்பட்டு வருகிறது. அதற்கு வசதியாக, காசாவில் வசிக்கும் அனைவரும் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன் இஸ்ரேல் பிறப்பித்த உத்தரவுகள் எல்லாம், குறிப்பிட்ட ஒரு பகுதியில் இருப்பவர்கள் பாதுகாப்பான மற்ற இடங்களுக்கு செல்லுங்கள் என்று மட்டுமே இருந்தன.

இப்போது மொத்த காசாவில் வசிப்பவர்களும் வேறு இடம் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒட்டு மொத்த இஸ்ரேல் ராணுவமும் காசாவில் களம் இறக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.

காசாவை முழுவதுமாக இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் போது தான், பிணைக்கைதிகளை ஒப்படைக்கும் முடிவுக்கு ஹமாஸ் வரும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles