நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி-க்கு போராட்டக்காரர்கள் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர் விரைவில் இடைக்கால பிரதமராக நியமிக்கப்படலாம் என தெரியவருகின்றது.
நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்கள் நடத்திய தீவிர போராட்டங்களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக யாரை தேர்வு செய்வது என்பது தொடர்பாக தொடர் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேபாள ராணுவத் தளபதி அஷோக் சிக்டெல், இது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதில், நேபாளத்தின் இடைக்கால பிரதமராக நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி-க்கு போராட்டக்காரர்கள் ஒருமனதமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். நாட்டின் இடைக்கால பிரதமராக பதவியேற்க அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
எனினும், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமா என்பது குறித்து கருத்து வேறுபாடுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே, இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதில் தாமதம் ஏற்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக நேபாள ஜனாதிபதி பவுடெல், ராணுவத் தளபதி அஷோக் சிக்டெல், சுசீலா கார்கி ஆகியோர் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆட்சியாளர்களுக்கு எதிராக நேபாளத்தில் கடந்த ஒரு வாரமாக நடந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. கடந்த திங்கள் கிழமை போராட்டம் தொடங்கிய அன்று 19 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த எண்ணிக்கை தொடர்ந்து கூடி வருகிறது.