தொடர்கிறது அநுர அரசின் அதிரடி: எம்.பிக்களுக்குரிய ஓய்வூதியமும் விரைவில் ரத்து!

 

ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்டமூலமும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பலப்பிட்டிய பிரதேசத்தில் தபாலகமொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” உலகின் பல நாடுகள் பொருளாதார வளர்ச்சியைக் காண்பிக்க தவறியுள்ள போதிலும், இலங்கை அதனை செய்து காண்பித்துள்ளதாக உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.
2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் வங்குரோத்தடைந்திருந்த நாடு இன்று மீண்டெழுந்துவருகின்றது. வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதற்கமையவே, கடந்த காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றக் கூடிய சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியினர் இதற்கு வாக்களித்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை. மாறாக இந்த விடயத்தை மறைப்பதற்காக மறுநாள் சபையில் வேறொரு விடயத்துக்காக கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.

அதேபோன்று வெகுவிரைவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நிறுத்துவதற்கான சட்டமும் நிறைவேற்றப்படும். அதற்கான சட்ட வரைபு தயாரிக்கப்பட்டு வருகிறது.” என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles