நேபாளத்தின்நிலை இலங்கையில் ஏற்படாமல் தடுத்த தலைவரே ரணில்!

நேபாளத்தின் நிலைக்கு செல்ல இருந்த எமது நாட்டை, அந்த நிலைமையில் இருந்து பாதுகாத்து சரியான பாதையில் கொண்டு சென்றமைக்காக ஒட்டுமொத்த தேசமும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அதன் கெளரவத்தை வழங்கவேண்டும். மக்களின் உள்ளத்தில் பொறாமை மற்றும் வெறுப்பை விதைத்து இலங்கைக்கு எந்த நன்மையையும் ஏற்படுத்திக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

நாட்டின் தற்போதை அரசியல் நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நேபாளத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற துயரமான நிலைமை தொடர்பில் எங்களுக்கு தெரியும். அதேபோன்றதொரு சம்பவமே கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் எமது நாட்டிலும் இடம்பெற்றது. அந்த நிலைமை தீவிர நிலைக்கு திரும்பும்போது, எமது நாட்டின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க, தனது வீடு எரிக்கப்பட்ட பின்னரும், அவர் மற்றவர்களின் வீடுகள் எரிக்கப்படுவதை நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டார்.

அதனால் நேபாளத்தின் நிலைமைக்கு செல்ல இருந்த எமது நாட்டை, அந்த நிலைமையில் இருந்து பாதுகாத்து, சரியான பாதையில் கொண்டு சென்ற ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒட்டுமொத்த தேசமும் அதன் கெளரவத்தை வழங்கவேண்டும். பிரச்சினைகள் ஏற்படுவது ஜனநாயக சமூகம் ஒன்றின் சிறப்பம்சமாகும். அவற்றை கட்டுப்படுத்துவதும் ஜனநாயக சமூகமொன்றின் சிறப்பம்சமாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அத்துடன் இரண்டு பெளர்ணமிக்குள் நாட்டில் இருந்து போதைப்பொருள் வியாபாரம், பாதாள குழுக்களை முற்றாக ஒழித்துக்கட்டுவதாக தெரிவித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இலங்கையில் மாத்திரமல்ல, முழு உலகில் இருந்தும் இதனை கட்டுப்படுத்த வேண்டும். குற்றங்களை முற்றாக இல்லாமலாக்க முடியாது. குற்றங்கள் என்பது மனித சமூகத்தின் மற்றுமொரு பக்கமாகும். அதனால் இந்த விடயங்களை கட்டுப்படுத்த மாத்திரமே முடியும். என்றாலும் இந்த விடயங்களை கட்டுப்படுத்துவதற்கு ஆளும் அரசாங்கத்துக்கு முடியாது என்றே தோன்றுகிறது.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழா, கடந்த 6ஆம் திகதியே இருந்தது. என்றாலும் எமது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் உடல் ஆராேக்கியத்தை கருத்திற்கொண்டு, நாங்கள் அதனை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தோம். அதன் பிரகாரம் ஆண்டு நிறைவு விழாவை எதிர்வரும் 20ஆம் திகதி நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறோம்.

இந்தமுறை ஐக்கிய தேசிய கட்சியின் ஆண்டு நிறைவு விழாவுக்கு இலங்கையில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம். இந்தமுறை ஐக்கிய தேசிய கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழாவை தேசிய இயக்கமாக கொண்டாடுமாறே எமது கட்சியின் தலைவர் ஆலாேசளை வழங்கி இருக்கிறார் என்றார்.

Related Articles

Latest Articles