கொழும்பில் இருந்து வெளியேறி தங்காலை கால்டன் இல்லத்தில் தற்போது தங்கியுள்ள மஹிந்த ராஜபக்ச மீண்டும் கொழும்பில் குடியேறுவது பற்றி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை. தேவையேற்படி சந்திப்புகளுக்காக கொழும்பு சென்று மீண்டும் ஊருக்கு திரும்பக்கூடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” குடியேறுவதற்காக கொழும்புக்கு மீண்டும் வருவது பற்றி மஹிந்த ராஜபக்ச தீர்மானம் எடுக்கவில்லை. ஏதேனும் தேவைக்காக வரநேரிடின் வந்துவிட்டு, மீண்டும் ஊருக்கு செல்வார். மக்களுடன் அவர் தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகின்றார். நாட்டில் பல பாகங்களில் இருந்தும் மக்கள் அவரை சந்திக்க வருகின்றனர்.
மஹிந்த ராஜபக்ச தற்போது அரச மாளிகையில் இருந்து வெளியேறிவிட்டார். அவர் அரச மாளிகையில் தங்கி இருப்பதுதான் பெரும் பிரச்சினையாக அரசாங்கம் காண்பித்தது. எனவே, தற்போது மக்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றார் சாகர காரியவசம்.