காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. இராணுவத்தின் நடவடிக்கைகள் விரிவாக்கம் செய்யப்படுவதால், அங்கு வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
நேற்று முதல் காசா முழுவதும் தீவிர வான்வழி மற்றும் பீரங்கிகள் மூலம் தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதல்களில் காசா நகரில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
“காசா பற்றி எரிகிறது” என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
” பயங்கரவாத உள்கட்டமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் இரும்புக்கரம் கொண்டு தாக்குகிறது. பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் ஹமாஸை தோற்கடிப்பதற்கும் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் துணிச்சலுடன் போராடுகிறார்கள்” என்று காட்ஸ் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் இந்த தாக்குதல்கள் தொடங்கப்பட்டுள்ளன.
முன்னதாக காசா நகரை முழுமையாக கைப்பற்றுவதாக இஸ்ரேல் அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.