5 ஆயிரம் ரூபா நோட்டைக் காண்பித்து பல லட்சம் ரூபா கொள்ளையடித்த பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் உட்பட மூவர் மாத்தறை திஹகொடவில் பேராதனை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
48 வயதான பாகிஸ்தான் பிரஜை, அவரது 22 வயதான மகன் மற்றும் அவர்களின் இலங்கை நண்பன் என சந்தேகிக்கப்படும் நபர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் இருந்து காரொன்றை வாடகைக்கு எடுத்து, நாடு முழுவதும் பயணம் செய்து இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டுவந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
கம்பளை, கெலிஓயா, அக்குறணை மற்றும் குருநாகல் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து இவர்களுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன .
கம்பளையிலுள்ள தொலைபேசி விற்பனை கடையொன்றுக்கு சென்றுள்ள இவர்கள் 5 ஆயிரம் ரூபா நோட்டை மாற்றி தருமாறு கேட்டுள்ளனர். 5 ஆயிரம் ரூபாவை கையில் வாங்கியதும் கடை உரிமையாளருக்கு ஏதோ நடந்துள்ளது. பின்னர் கடையில் இருந்த 70 ஆயிரம் ரூபாவை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல கம்பளை நகரில் உள்ள வெற்றிலை கடையொன்றுக்கு சென்ற இவர்கள், 30 ரூபாவை கொள்ளையடித்துள்ளனர். இவர்கள் வழங்கும் பணத்தை கையில் வாங்கியதும் சிறிது நேரத்தக்கு சுயநினைவை இழக்கும் நிலை ஏற்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
பேராதனை பொலிஸார் கெலிஒயா நகருக்கு வந்து சிசிரிவி கமராக்களை ஆய்வு செய்து, பாகிஸ்தானியர்களையும், அவர்கள் பயணித்த காரையும் அடையாளம் கண்டு, அதன் உரிமத் தகடு எண்ணின் அடிப்படையில் உரிமையாளர் நீர்கொழும்பின் கொச்சிக்கடையில் இருப்பதைக் கண்டறிந்தனர்.
அதன்படி, நீர்கொழும்புக்குச் சென்ற பொலிஸார் காரில் ஜிபிஎஸ் இருப்பதை உரிமையாளரிடமிருந்து அறிந்து, அதைச் சோதித்தபோது, கார் மாத்தறை பகுதிக்குச் செல்வதைக் கண்டு, அதைக் கண்காணித்து திஹகொட பகுதியில் வைத்து மடக்கிப்பிடித்தனர்.
இவர்களிடமிருந்து வெளிநாட்டு நாணயத்தாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. விசாரணைகளின் பின்னர் இவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
இவர்களின் பின்புலம் என்ன, இவர்கள் எவ்வாறான பகுதிகளில் கொள்ளையடித்துள்ளனர், இவ்வாறு மயக்குகின்றனர் என்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பலகோணங்களில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
க,யோகா










