ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் நாளை மறுதினம் புதன்கிழமை உரையாற்ற உள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பாலஸ்தீனத்துக்கான இலங்கையின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தவுள்ளார்.
ஐ.நா. பொதுச்சபையின் 80 ஆவது கூட்டத்தொடரில் பாலஸ்தீன விவகாரம் முக்கிய பேசுபொருளாக மாறவுள்ளது.
பிரான்ஸ், கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் தமது தீர்மானத்தை குறித்த தொடரில் அறிவிக்கவுள்ளன.
இந்நிலையிலேயே பாலஸ்தீன விடுதலைக்குரிய ஆதரவை இலங்கை ஜனாதிபதியும் வெளிப்படுத்துவார் என தெரியவருகின்றது.
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் இன்று (22) அமெரிக்கா நோக்கி பயணமாகின்றனர்.
குறித்த கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு பாலஸ்தீன ஜனாதிபதிக்கு அமெரிக்காவால் விசா மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் நிகழ்நிலை தொழில்நுட்பம் மூலம் உரையாற்றுவதற்கு அனுமதிக்கும் பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்களுடன் இவ்விஜயத்தின்போது அநுரகுமார திஸாநாயக்க இரு தரப்பு சந்திப்புகளில் ஈடுபடுவார். அதேபோல வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் வெளிவிவகார அமைச்சர்களை சந்திக்கவுள்ளார்.
இவ்விஜயத்தின்போது அமெரிக்கா வாழ் இலங்கை சமூகத்தினரையும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சந்திக்கவுள்ளார்.
அமெரிக்காவில் இருந்து எதிர்வரும் 27 ஆம் திகதி ஜப்பானுக்கான தனது அதிகாரப்பூர்வ பயணத்தை ஜனாதிபதி அநுர ஆரம்பிக்கவுள்ளார்.
28 ஆம் திகதி ஜப்பான் பிரதமர் மற்றும் ஜப்பான் பேரரசர் ஆகியோருடன் சந்திப்புகளை நடத்துவார். இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன.
எதிர்வரும் 30 ஆம் திகதி ஜனாதிபதி நாடு திரும்புவார்.










