அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் நடந்தது என்ன?

 

அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் நேற்றிரவு குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அவருக்கு முறையாக சிகிச்சையளிக்கப்படாததாலேயே உயிரிழந்தார் என பிரதேச மக்கள் சிலர் குற்றஞ்சாட்டினர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகல தோட்டம் மேல் பிரிவை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் கடந்த 23 ஆம் திகதி குறித்த வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் மருந்து எடுத்துக்கொண்டு வீடு சென்றுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு நேற்று நோயின் நிலை தீவிரமாகியுள்ளது. இதனையடுத்து குறித்த இளைஞனை அவரது உறவினர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுவந்துள்ளனர். அவரை பரிசோதித்த வைத்தியர், தங்கி இருந்து சிகிச்சைப் பெறுமாறு அறிவுறுத்தி இருந்தார்.

இவ்வாறு சிகிச்சைப்பெற்றுவந்த இளைஞன் நேற்றிரவு (25) உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்தே பிரதேச மக்கள் சிலர் வைத்தியசாலைக்குள் நுழைந்து, முறையாக சிகிச்சையளிக்கப்படாததாலேயே உயிரிழந்தார் என ஆக்ரோஷமாக நடந்துகொண்டுள்ளனர்.

இதனையடுத்து அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் வைத்தியசாலைக்கு விரைந்தனர்.

அங்கிருந்த மக்களை வைத்தியசாலை வளாகத்தில் இருந்து அகற்றி, வைத்தியசாலைக்கு பலத்த பாதுகாப்பளித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்திடம் வினவுவதற்கு முற்பட்டபோதும் அது பயனளிக்கவில்லை.

Related Articles

Latest Articles