காசா மீதான இஸ்ரேல் போருக்கு கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இதற்கிடையே இஸ்ரேலுடனான உறவை கடந்த ஆண்டு கொலம்பியா முறித்து கொண்டது.
இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் சென்றிருந்தனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அங்கு சென்றபோது அவரை கண்டித்து பாலஸ்தீன ஆதரவு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் குஸ்டாவோ பெட்ரோவும் கலந்து கொண்டார்.
அப்போது காசா மீதான இஸ்ரேல் போரை இனப்படுகொலை என விமர்சித்தார். மேலும் அமெரிக்க ராணுவ வீரர்கள் டிரம்ப்பின் உத்தரவுக்கு இணங்கக்கூடாது எனவும் கூறினார்.
இதனையடுத்து நாட்டில் வன்முறையை தூண்டியதாக குஸ்டாவோ பெட்ரோவின் விசாவை ரத்து செய்வதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.