13 வருடங்களு முன்னர் தலைநகரின் பிரதான வீதியில் ரக்பி வீரர் வசிம் தாஜுடீனை சுட்டுக் கொன்ற நபர், எட்டு மாதங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட ஒருவர் என, குற்றப்புலனாய்வு திணைக்களம் இப்போது அடையாளம் கண்டுள்ளது.
நான்கு அரசாங்கங்களின் ஆட்சியின் போது வழங்கப்படாத நீதியைத் தவிர்க்கும் அபாயத்தை ஏற்படுத்தும் இந்த ‘புதிய கண்டுபிடிப்பு’, இறந்த தாஜுடீனின் மாமா பயாஸ் லத்தீப், இது சித்திரவதை செய்து கொலை செய்ய்பபட்டுள்ளதாக பொது வெளியில் நம்பகமான கருத்துக்களை வெளியிட்ட மறுதினம் பொலிஸாரால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வருடம் பெப்ரவரி 18 ஆம் திகதி, மித்தெனிய பகுதியில் தனது இரண்டு பிள்ளைகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட விதானகமகே அனுர பிரியந்த குமார அல்லது கஜ்ஜா, தாஜுடீனை பின்தொடர்ந்ததாகவும், கஜ்ஜாவின் மனைவி சிசிடிவி காட்சிகள் மூலம் அவரை அடையாளம் கண்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் வாக்குமூலம் அளித்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அனுர பிரியந்த குமார கொலை தொடர்பாக பொலிஸார் ஆரம்பத்தில் அரசாங்க பாதுகாப்புப் படை உறுப்பினர்களையும் கைது செய்தனர். ஒருவர் ஒரு பொலிஸ் அதிகாரி. மற்ற இருவரும் முன்னாள் இராணுவ வீரர்கள் என பொலிஸார் கூறியிருந்தனர்.
முதுகுப் பிரச்சினை உள்ள குற்றவாளிகளைப் பிடிப்பது
“மேலும், வசிம் தாஜுடீன் கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது பெறப்பட்ட சிசிடிவி காட்சிகளை விசாரணை அதிகாரிகள் உயிரிழந்த கஜ்ஜா என்பவரின் மனைவியிடம் காட்டினர், மேலும் அந்தக் காட்சிகளில் உள்ள நபர், சுமார் 17 வருடங்களாக தன்னுடன் திருமண வாழ்வில் இருந்த அவரது கணவர் என அடையாளம் காணப்பட்டார்,” என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இறந்த சந்தேகநபருக்கு முதுகுப் பிரச்சினை இருந்ததாவும், அவர் தனது கைகளை முதுகுக்குப் பின்னால் பிடித்தவாறு இருந்த தோரணையின் அடிப்படையில் அவரை தனது கணவர் என அடையாளம் காண முடியும் என அவரது மனைவி பொலிஸாரிடம் கூறியதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் கூறியுள்ளது.
2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில், வசிம் தாஜுடீன் கொலை செய்யப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், விசாரணை தொடங்கப்பட்டதோடு, அந்த விசாரணைக்கு அமைய, ராஜபக்ச ஆட்சியின் பாதுகாப்புப் படையினர் மற்றும் துணை இராணுவப் பணியாளர்கள் மீது சந்தேகம் எழுந்தது.
அப்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த மூத்த பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகர தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.
2019 ஆம் ஆண்டு கோட்டாய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பணி இடைநீக்கத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவிலும் இது கூறப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர, தாஜுடீனின் கொலைக்கான சந்தேகத்தை அரசியல் தொடர்புகளைக் கொண்ட துணை இராணுவப் படைகளைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிய போதிலும், 10 வருடங்களுக்குப் பின்னர், ஷானி அபேசேகர பணிப்பாளர் பதவியை வகிக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமே, இறந்த ஒருவரை சந்தேகநபராகக் குறிப்பிடுகிறது.
அப்போது ஷானி இப்போது ஷானி
2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு அமைய அப்போதைய மூத்த பொலிஸ் அதிகாரி அனுர சேனநாயக்க, அப்போதைய கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர, நாரஹேன்பிட்ட பொலிஸ் குற்றப்பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் மீது ஆதாரங்களை மறைத்த குற்றச்சாட்டு குறித்து கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
ஏனெனில் தாஜுடீன் மதுபோதையில் வாகனம் ஓட்டியதால் இறந்ததாகக் கூறி குற்றவியல் உண்மைகளை மறைத்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
ஆரம்ப விசாரணைகளுக்கு 10 வருடங்களின் பின்னர், இரண்டு விசாரணைகளையும் நடத்திய ஒரே நபரின் கீழ் வெவ்வேறு சந்தேகநபர்களை அடையாளம் காண்பதில் உள்ள முரண்பாட்டிற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களமோ அல்லது பொலிஸ் ஊடகப் பேச்சாளரோ எந்த விளக்கத்தையும் வழங்கவில்லை.
கஜ்ஜா எனப்படும் அனுர பிரியந்த குமார பற்றிய விபரங்களை முதலில் வெளிப்படுத்தியவர், தற்போது பொலிஸ் காவலில் உள்ள, பொலிஸாரால் உண்மையான பெயர் வெளிப்படுத்தப்படாத, பெக்கோ சமன் என்ற புனைப்பெயரில் அறியப்பட்ட ஒருவரால் ஆகும். கஜ்ஜாவின் மனைவி பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்திற்கு அமைய பெக்கோ சமனிடமிருந்து கஜ்ஜாவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் பொலிஸ் தெரிவித்துள்ளது.
தாஜுடீன் கொல்லப்பட்ட நாளில் அவரது வாகனத்தைப் பின்தொடர்ந்த அடையாளம் தெரியாத வாகனம் மற்றும் வழியில் தாஜுடீனின் வாகனத்தில் ஏறிய நபரின் காட்சிகளைக் காட்டியபோது, அவர் தனது கணவர் என கஜ்ஜாவின் மனைவி அடையாளம் கண்டதாகவும் பொலிஸ் தெரிவிக்கின்றது.
“இதற்கமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, மேலும் அன்றைய தினம் இறந்த வாசிம் தாஜுடீன் பயணித்த காரின் பின்னால் மற்றொரு சந்தேகத்திற்கிடமான வாகனம் பயணித்திருப்பது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது. அந்த வாகனத்தில் ஒருவர் ஏறியிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது, மேலும் அந்த நபரை அடையாளம் காண விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன,” என பொலிஸ் ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.
“சந்தேகத்திற்கிடமான வாகனம்” என்ன என்பது பொலிஸ் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
கொலை நடந்து எட்டு மாதங்களுக்குப் பிறகு
இறப்பதற்கு முன்பு, அனுர பிரியந்த குமார ஒரு சமூக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ராஜபக்ச காலத்தில் செய்யப்பட்ட பல கொலைகள் மற்றும் குற்றங்கள் பற்றிய விடயங்களை வெளிப்படுத்தியதோடு, அவற்றில் சிலவற்றுடனான அவரது தொடர்பை பகிரங்கமாக குறிப்பிட்டார்.
அப்படியானால், அந்த செவ்வி வெளியாகி அவர் கொல்லப்பட்ட வரை, அவர் செய்ததாகக் கூறும் குற்றங்கள் குறித்து பொலிஸார் ஏன் அவரிடம் விசாரிக்கவில்லை என்ற பிரச்சினை எழுகிறது? அவர் கொல்லப்பட்ட எட்டு மாதங்களுக்குப் பின்னர் தாஜுடீனின் கொலையுடனான அவரது தொடர்பை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வெளிப்படுத்தியுள்ளது.
தமது சமூக ஊடகங்களில் பதிவிடும் ஆர்வலர்களை சிறையில் அடைக்க பயங்கரவாதச் சட்டத்தைப் பயன்படுத்தும் பொலிஸார், சமூக ஊடகத்திற்கு கஜ்ஜா வழங்கிய வாக்குமூலத்தை விசாரித்ததா என்பது தெரியவில்லை.
2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் புதிய சட்ட வைத்திய அறிக்கைகளுக்கு அமைய தாஜுடீன் கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இறந்தார். பொலிஸார் விபரித்த புதிய சூழ்நிலையில் பலம்மிக்க ரக்பி வீரர் தாஜுடீனின் வாகனத்தில் ஏறிய ஒரு நபர் அவ்வாறு செய்திருக்க முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
உண்மையான கொலையாளியை மூடிமறைக்கும் அபாயம் உள்ளதா?
இருப்பினும், தாஜுடீனின் கொலையில் சந்தேகநபராகக் கூறப்படும் அனுர பிரியந்த குமார அல்லது கஜ்ஜாவைக் கொலை செய்த குற்றச்சாட்டில் இரண்டு முன்னாள் இராணுவ வீரர்களும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளும் கைது செய்யப்பட்டனர்.
ரக்பி வீரர் வாசிம் தாஜுடீனின் கொலை, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீண்டும் விசாரணை நடத்துவதாக அறிவித்துள்ள மூடிமறைக்கப்பட்ட குற்றங்களின் பட்டியலில் முன்னணியில் உள்ளது. பல சந்தர்ப்பங்களில் விசாரிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளக்கூடிய தகவல்களுடன் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட இத்தகைய குற்றம், இறந்த நபரின் பெயரைக் காரணம் காட்டி மறைக்கப்படுகிறதா என கடுமையான சந்தேகங்கள் எழுவதை தவிர்க்க முடியாதுள்ளது.