ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள், தமிழினப் படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் – சர்வதேச நீதியை எதிர்பார்க்கும் தமிழ் சிவில் சமூகத்துக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெனிவாவில் நடைபெறும் 60 ஆவது கூட்டத் தொடரின் உபஅமர்வில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
‘ 2008 டிசம்பர் முதல் 2009 மே மாதம் வரை இலங்கை அரசு தமிழர்களைக் கொன்றதன் மூலம் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்தது.
இந்த இனப்படுகொலைக்கு ஈழத் தமிழர்கள் சர்வதேச – பாரபட்சமற்ற – நீதியான விசாரணைகளைக் கோருகின்றனர். கடந்த 16 ஆண்டுகளாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றிடம் முறையிட்டு வருகின்றனர்.
ஈழத்தமிழர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதையும் நிலைமாறு கால நீதியை மேம்படுத்துவதையும் உறுதி செய்வதற்கான முயற்சிகளுக்கு ஆதரவாக தமிழ் சிவில் சமூகத்துக்கு முழு ஒத்துழைப்பையும் உதவியையும் வழங்க அனைத்து உறுப்பு நாடுகளையும் கேட்டுக்கொள்கிறேன்.” எனவும் சிறிதரன் எம்.ப. குறிப்பிட்டார்.
ஐ.நா. பொதுச் சபையின் 3ஆவது குழு உறுப்பினர்கள், இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்க வேண்டும். இலங்கை மீதான மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்கு நிதி உதவி அளிக்க வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை நடத்தினர். இதன் இறுதி நாளில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளுக்குச் சர்வதேச நீதி கோரப்பட்டது.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.