அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அமைதி திட்டத்தை ஏற்று இஸ்ரேல் பணய கைதிகளை ஒப்படைப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை ஹமாஸ் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து காசா மீதான தாக்குதலை உடனே நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு டிரம்ப் அறிவுறுத்தினார்.
அதை ஏற்று தாக்குதல்களை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் அறிவித்தார்.
ஆனால் நேற்று காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் உதவிப்பொருட்களுக்காக காத்திருந்த இருவர் உட்பட 16 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பட்டினியால் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த தாக்குதல் தொடர்பாக கருத்து வெளியிட்ட இஸ்ரேல் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர், சில குண்டுவீச்சுகள் நிறுத்தப்பட்டாலும், இப்போதைக்கு காசாவில் முழுமையான போர் நிறுத்தம் எதுவும் நடைமுறையில் இல்லை என்று கூறினார்.
இந்நிலையில், காசாவின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே இஸ்ரேலிய பேச்சு குழு ஒன்று, கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக பாலஸ்தீன குழுவான ஹமாஸ் அமைப்புடன் இன்று எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் நகரில் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது.