மலையக மக்களுக்கான இந்தியாவின் 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் 4 ஆம் கட்டமாக 4 ஆயிரத்து 700 பயனாளிகளுக்கு வீடுகளை கையளிக்க திட்டமிட்டுள்ளோம். இதன் முதற்கட்டமாக 2 ஆயிரம் வீட்டு அலகுகளுக்குரிய உரிமைப் பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு எதிர்வரும் 12 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் பண்டாரவளையில் நடைபெறும்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இந்த தகவலை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வெளியிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அழகான இல்லம், ஆரோக்கியமான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் மலையக மக்களுக்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. 200 வருடகால வரலாற்றைக்கொண்ட எமது மக்களுக்குரிய வீட்டுரிமை, காணி உரிமை என்பன மிக முக்கிய கோரிக்கைகளாக அமைந்தன.
எமது மக்களுக்காக இந்தி அரசாங்கத்தால் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டது. இந்த 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் 4 ஆம் கட்டமாக 4 ஆயிரத்து 700 பயனாளிகளுக்கு வீடுகளை கையளிக்க திட்டமிட்டிருந்தோம். இதன் முதற்கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு எதிர்வரும் 12 ஆம் திகதி ஜனாதிபதியால் பண்டாரவளையில் வைத்து கடிதங்கள் கையளிக்கப்படும். 10 பேர்ச்சஸ் காணியும், அந்த காணிக்குரிய உரித்தும் அன்றைய தினம் வழங்கப்படும். இந்நிகழ்வானது மலையக மக்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்.
மலையக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு காத்திருக்கின்றோம். மிகுதியான வீடுகளையும் விரைவில் கட்டி முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். எமது மக்களுக்காக இந்தியா வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றி.” – என்றார்.