” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான பிரதான சூத்திரதாரி கண்டறியப்பட்டிருந்தால் அது பற்றி நீதிமன்றத்தக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். தெரிவுக்குழுவில் கலந்துரையாடப்பட்ட விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது தவறு.”
இவ்வாறு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தயாசிறி ஜயசேகர,
” உயர் பதவிகள் தொடர்பான தெரிவுக்குழுவில் நானும் உறுப்பினராக இருக்கின்றேன். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன நேற்று (நேற்று முன்தினம்) அக்குழுவுக்கு வருகை தந்திருந்தார்.
நிஷாம் காரியப்பர் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளார் என அவர் கூறினார்.
இந்நிலையில் ஊடகங்கள் எம்மை தொடர்புகொண்டு இது பற்றி வினவுகின்றன. இதன் பின்னணியில் (தாக்குதலின்) இந்தியா இருந்ததது என அவர் (ரவி செனவிரத்ன) கூறவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவர் அவ்வாறான அறிவிப்பை வெளியிடவில்லை.
உயர் பதவிகள் தொடர்பான தெரிவுக்குழுவுக்கு வந்து இதனை சொல்ல வேண்டியதில்லை. பிரதான சூத்திரதாரி யாரென நீதிமன்றத்திடம் சென்று கூறவேண்டும்.
நிஷாம் காரியப்பர் புதிய எம்.பி., தெரிவுக்குழுவில் கலந்துரையாடப்பட்ட விடயத்தை அவர் டுவிட் செய்தது தவறு.” – என்றார் தயாசிறி.










